திருச்சி
திருச்சியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் பெண்களைப் புகைப்படம் எடுத்து ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள வளசரவாக்கம் ஓய்.எம்.ஜி.பாபு தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார் ஆவார். திரைத்துறை இயக்குநரான இவர், தற்போது புதுமுக நாயகனை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்த புகாரில் “நான் திரைத்துறை இயக்குநராக இருந்து வரும் நிலையில், இளம் நடிகர்களை நடிக்க வைக்க திரைப்பட்டறை என்ற பெயரில் பயிற்சி பள்ளியையும் நடத்தி வருகிறேன். எனக்கு சாலை விபத்தில் கணவரை இழந்த மைதிலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுக் கடந்த ஏழு ஆண்டுகளாக அவருடன் ஒன்றாக வசித்து வருகிறேன்.
இதற்கு முன் மைதிலி திருச்சியில் வாழும் தன் குடும்ப நண்பரான ஜெயராம் பாண்டியன் (பாஜக பிரமுகர்) என்பவருடன் இணைந்து பாஜகவில் பணியாற்றியுள்ளார் இருவரும் இணைந்து பணியாற்றியபோது மைதிலியின் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்த ஜெயராம் பாண்டியன், தற்போது அதைக் காண்பித்து அவரை மிரட்டி வருவதோடு, அலைப்பேசி மூலம் ஆபாசமாகவும் பேசி தொந்தரவு கொடுத்து வருகிறார். அவர்மீது நடவடிக்கை தேவை” எனத் தெரிவித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த ஜெயராம் பாண்டியனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இன்று திருச்சியில் பதுங்கியிருந்த ஜெயராம் பாண்டியனைக் கைது செய்த வளசரவாக்கம் போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறை விசாரணையில் இவர், பாஜக பிரமுகர் என்பதுடன் மைதிலி மட்டுமன்றி வேறு சில பெண்களின் புகைப்படங்களையும் எடுத்து வைத்து அவர்களையும் மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து ஜெயராம் பாண்டியன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.