டில்லி

பாஜக தற்போது மக்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பேச முழுவதுமாக மறந்து விஎட்டதாக காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் பாஜக தொடர்ந்து மறைந்த முன்ன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை குறித்து அவதூறு பரப்பி வருகிறது. இது மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி வருகிறது. பாஜகவின் கர்நாடக மாநில வேட்பாளர் ஸ்ரீனிவாச பிரசாத் மோடியின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் செயலரும் ராஜிவ் காந்தியின் மகளுமான பிரியங்கா வதேரா காந்தி ஆங்கில ஏடு ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பிரியங்கா, “நான் நெடுநாட்களாக அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியை கவனித்து வந்த போதிலும் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் நான் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளேன். இதற்கு முக்கிய காரணம் தற்போது நமது நாட்டில் குடியாட்சிக்கும் அரசியலமைப்புக்கும் கடும் மிரட்டல் உண்டாகியதாகும். என்னால் கோழையைப் போல் இந்த நேரத்தில் வீட்டினுள் அமர்ந்திருக்க முடியவில்லை.

நான் காங்கிரஸ் கட்சி விரும்பினால் தற்போது உத்திரப் பிரதேச கிழக்குப் பகுதியின் பொறுப்புக்களை கவனிப்பது போல் நாடெங்கும் உள்ள பொறுப்புக்களை கவனிக்க தயாராக உள்ளேன். தற்போது உத்திரப் பிரதேச கிழக்கு பகுதியில் அதிகம் பணிகள் உள்ளதால் நான் இந்த பகுதியின் பொறுப்பை ஏற்றுள்ளேன். அத்துடன் குறைவான நேரமே உள்ளதால் என்னால் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்ய முடியவில்லை. முடிந்த அளவு நான் பிரசாரம் செய்து வருகிறேன்.

ராகுல் காந்தி என்னை ஏற்கனவே அரசியலுக்கு வரும்படி பல முறை கேட்டுக் கொண்டுள்ளார். நான் மறுத்துள்ளேன். ஏற்கனவே நான் முழு நேர அரசியலில் ஈடுபட்டிருந்தால் இப்போது நிலைமை முழுமையாக மாறி இருக்கக்கூடும். உத்திரப் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. சாமஜ்வாதி = பகுஜன் சமாஜ் கூட்டணியும் எங்களது தனிப் போட்டியும் பாஜகவுக்கு நிச்சயம் ஆதாயம் அளிக்காது. சொல்லப்போனால் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளை அவர்கள் பிரிக்கிறார்கள்.

தற்போது விவசாயிகள் பிரச்சினை, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளன. பாஜகவின் பிரசாரத்தை பார்க்கும் போது இவைகளை அக்கட்சி மறந்து விட்டது போல் தோன்றுகிறது. ஆனால் காங்கிரசின் நியாய் என்னும் குறைந்த பட்ச ஊதிய திட்டத்துக்கு மக்களின் ஆதரவு மிகவும் அதிகரித்து வருகிறது.

தங்களின் குறைகளை தீர்க்கக்கூடியது காங்கிரஸ் கட்சி என்னும் எண்ணம் மக்களிடையே உள்ளது..   இதை அறிந்துக் கொண்ட பாஜக தோல்வி பயத்தினால் மறைந்த தலைவர் ராஜிவ் காந்தி மீது அவதூறு பரப்பி வருகிறது” ” என தெரிவித்துள்ளார்.