ஐதராபாத்: மத்திய உள்துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், தெலுங்கானா அரசியல் மட்டுமின்றி, ஆந்திர அரசியலிலும் அதிக முக்கியத்துவம் பெறக்கூடிய ஆளாக மாறியுள்ளார் கிஷான் ரெட்டி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தெலுங்கானாவில் தனித்து நின்று 4 இடங்களை வென்றது பாரதீய ஜனதா. அந்த 4 மக்களவை உறுப்பினர்களுள் செகுந்தரபாத் தொகுதி உறுப்பினர் கிஷான் ரெட்டி, முக்கியத்துவம் வாய்ந்த உள்துறையின் இணையமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், அக்கட்சியை தெலுங்கானா மாநிலத்தில் பெரியளவில் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தனக்கான இந்த முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி, 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள தெலுங்கானா சட்டசபைத் தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கிஷான் ரெட்டி திட்டமிடுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தெலுங்கானாவோடு நின்றுவிடாமல், ஆந்திரப் பிரதேசத்திலும் கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்துமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதே செகுந்தரபாத் தொகுதியிலிருந்து முன்பு தேர்வு செய்யப்பட்ட பாரதீய ஜனதா தலைவரான பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு இதற்குமுன் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத தொழிலாளர் நலத்துறையே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.