தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் அமைத்து மாதம் 10 சதம் முதல் 30 சதம் வரை வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் நிதி திரட்டிய நிறுவனம் ஆருத்ரா கோல்டு.
இந்நிறுவனத்தின் இயக்குனராக உள்ளவர் ஹரிஷ் இவர் தமிழ்நாடு பாஜக-வின் விளையாட்டுப் பிரிவு செயலாளராக இருந்தவர்.
ஆருத்ரா கோல்டு நிறுவனம் அளித்த வாக்குறுதியை நம்பி ஏராளமான பொதுமக்கள் சுமார் 2438 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த நேரத்தில் தங்களுக்கு பணத்தை திரும்ப தரவில்லை என்று அதன் வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த 14 நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பாஜக முன்னாள் நிர்வாகியான ஹரிஷ் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அமர்பிரசாத் ரெட்டியின் வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பாஜக-வில் பதவி பெறுவதற்காக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு லஞ்சம் வழங்கியதாகவும் அதற்காக சுமார் ரூ. 130 கோடி வரை செலவு செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக பிரமுகர் அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோரை நேரில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.