சேலம்:
சேலம் அருகே 1,455 கிலோ குட்கா பதுக்கிய பா.ஜ.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் அடுத்த இரண்டு மாத்திகுள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க, அதன் விற்பனையை முழுமையாக தடுக்கவேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில், போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கவும், பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
தமிழ்நாடு டி.ஜி.பியின் உத்தரவைத் தொடர்ந்துசேலம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக கோவை மண்டல காவல்துறைத் தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இதில் அதிகப்படியாக ஆத்தூர் அருகே, 1455 கிலோ குட்கா பொருட்கள் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் பதுக்கி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட தம்மம்பட்டி பகுதியில், பா.ஜ.க நிர்வாகியின் நண்பர் கோபால் என்பவரின் தோட்டத்தில், ஒருவர் அதிகபடியான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில், அந்த தோட்டத்தில் போலிஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு 101 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 1455 கிலோ போதை புகையிலை பொருட்கள் சிக்கியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தியதில், இந்த போதைப் பொருட்களை பா.ஜ.க வர்த்தக அணியின் மாவட்டச் செயலாளராக உள்ள பிரகாஷ் என்பவர் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவர் பதிக்கி வைத்திருந்த 20.05 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலிஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.