இம்பால்: போதை மருந்து கடத்தல் தொடர்பாக, மணிப்பூர் மாநிலத்தில் வழக்கை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒக்ராம் ஹென்றி சிங், பாரதீய ஜனதாவில் இணைந்துள்ளார்.

இதன்மூலம், பாரதீய ஜனதாவின் போதைப் பொருள் ஒழிப்பு கோஷம் அம்மாநிலத்தில் சந்தி சிரித்துள்ளது.

தலைநகர் இம்பாலின் கிழக்கு வாங்க்கீ தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் இந்த ஒக்ராம் ஹென்றி. இவர், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் இபோபி சிங்கின் மருமகன் ஆவார்.

கடந்த 2013ம் ஆண்டு, இம்பால் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப் பொருட்கள் தொடர்பாக ஒக்ராம் ஹென்றி தொடர்புபடுத்தப்பட்டார். இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு சிபிஐ அமைப்பிற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், கடந்த 2017 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், கூட்டணிகளின் உதவியுடன் பாரதீய ஜனதா ஆட்சியமைத்தது. அதன்பிறகு, போதை மருந்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக தொடங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், அக்கட்சி வழக்கமாக அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளும் நெறிமுறையற்ற சித்து விளையாட்டுகளின் விளைவால், காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதீய ஜனதாவில் இணைந்தனர். அவர்களுள், இந்த ஒக்ராம் ஹென்றி சிங்கும் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.