லக்னோ :
உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ. தீவிரமாக திட்டமிட்டு செயல்படுகிறது. 14 ஆண்டு வனவாசத்துக்கு பிறகு மோடி பிம்பத்தில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது.
உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 150 தொகுதிகளுக்கு பா.ஜ.வுக்கு சரியான வேட்பாளர்கள் இல்லை. தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இன்னும் முழு வேட்பாளர் பட்டியலை கூட வெளியிட முடியாமல் பாஜ திணறி வருகிறது.
ஜாதி மற்றும் மத அடிப்படையில் ஈடுகொடுக்கும் அளவுக்கு உ.பி.யில் பாஜவுக்கு ஆளில்லை என்பதையே இது காட்டுகிறது. பிற கட்சியில் இருந்து வந்தவகர்ளை வேட்பாளர்களாக நிறுத்துவதே இதற்கு தீர்வாகும் என்று பாஜ திட்டமிட்டுள்ளது. அதனால் ஏற்கனவே அறிவித்த பட்டியலில் உள்ள 50 பேர் இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டவர்கள். இதற்கும் கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல ஆண்டுகளாக கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
உ.பி.யில் ஆரம்பத்தில் இருந்தே கட்சியின் அடிமட்டம் வரை உயர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்துள்ளது. கட்சியே முழுமுழுக்க உயர் வகுப்பை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அவர்களது ஆதிக்கம் தான் கட்சியில் அதிக அளவில் உள்ளது. இதனால் தேர்தல்களில் போட்டியிட அவர்களுக்கு தான் அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்படும்.
ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. கட்சியின் வாங்கு வங்கியையும் பாஜ தக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதோடு பெரும்பான்மையாக உள்ள பிற சமுதாய மக்களையும் திருப்திபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி கட்சியில் உள்ள யாதவாக்களோ அல்லது மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் இருக்கும் தலித்களோ பா.ஜ. பக்கம் செல்ல தயாராக இல்லை.
கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் பா.ஜ. பெற்ற 80 இடங்களும் யாதவர்கள் மற்றும் தலித்கள் இல்லாத மற்ற ஜாதியினரின் ஓட்டுக்களால் மட்டுமே என்பது உண்மை. பாஜ.வுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணிக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.
மோடி பிரசாரத்திற்கு பிறகு உ.பி.யில் பா.ஜ.வின் நிலை மாறும் என அக்கட்சியினர் தீவிரமாக நம்புகின்றனர். இதன் அடிப்படையில் தேர்தல் பணிகளை விறுவிறுப்பு காட்டி வருகின்றனர்.