சென்னை
பாஜகவை கிண்டல் அடிக்கும் டாக்சி விளம்பரத்துக்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாட்டில் பாஜக வை கேலி செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது. சமூக வலை தளங்களில் அந்தக் கட்சியின் நிகழ்வுகள் பலரும் கேலிச்சித்திரத்தின் மூலம் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது நடந்து முடிந்த ஆர் கே நகர் இடைத் தேர்தலில் பாஜக நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றது. அதையொட்டி அந்த கட்சி மிகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. அந்த கிண்டல் தற்போது விளம்பரத்திலும் வந்துள்ளது.
சென்னையை சேர்ந்த வாடகைக் கார் நிறுவனமான டிராப் டாக்சி சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டு இருந்தது. அது பாஜக ஆதரவு பத்திரிகையான ”துக்ளக்” இதழில் வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. அந்த விளம்பரத்தில் ”தாமரை போலே நோட்டாவை விட குறைவான வெளியூர் டாக்சி கட்டணங்கள்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
வழக்கமாக வெளியூர் செல்லும் டாக்சிகளின் கட்டணமாக போக வர என வசூலிக்கப்படும். ஆனால் இந்த நிறுவனம் போவதற்கு மட்டும் வசூலிக்கப் படுவதால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மௌனராகம் திரைப்படத்தில் வரும் “மன்றம் வந்த” என்னும் பாடலை அடிப்படையாக கொண்ட விளம்பரம் இது எனவும் சொல்லப் படுள்ளது. ஆனால் பாஜகவினர் அதை ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த வாடகைக் கார் நிறுவன கால் செண்டருக்கு தொலைபேசியில் பாஜகவினர் தங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பதிவை இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் வெளியுட்டுள்ளார். அந்த பதிவு ஒரு பாஜக ஆதரவாளர் கால் செண்டர் ஊழியருடன் பேசும் போது பதிவு செய்யப் பட்டுள்ளது.
அந்தப் பதிவில், “உங்கள் விளம்பரத்துக்காக பலரின் மனதை புண்படுத்தி உள்ளீர்கள். இந்து மதத்தை காக்க எவ்வளவு முயற்சியை அந்தக் கட்சி எடுத்து வருகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் வர்த்தகத்துக்காக அந்தக் கட்சியை அவமானப் படுத்தி விட்டீர்கள். இது உங்களின் கேவலமான மன நிலை. ஒரு பாலியல் தொழிலாளி கூட உங்களைப் போல கேவலமாக நடந்துக் கொள்ள மாட்டார்.
என்ன ஒரு தைரியத்தில் உங்களால் இப்படி விளம்பரம் செய்ய முடிகிறது ? பாஜக வை சேர்ந்த யாரும் உங்களை எதிர்க்க மாட்டார்கள் என நினைக்கிறீர்களா? நீங்க ஒரு தந்தைக்கு பிறந்திருந்தால் இதே போல ஒரு விளம்பரத்தை திமுகவை குறிப்பிட்டு வெளியிடுங்கள் பார்ப்போம். அதை உங்களால் செய்ய முடியுமா? திமுகவும் டிபாசிட் இழந்துள்ளதே, அதை ஏன் குறிப்பிடவில்லை.? திமுகவினர் உங்களை தாக்குவார்கள் என்னும் பயமா? அல்லது நாங்கள் தாக்க மாட்டோம் என்னும் தைரியமா?” எனக் கேட்கப்படுள்ளது.
பாஜக தலைவர்களில் ஒருவரான நாராயணன் திருப்பதி, “இந்த விளம்பரம் அந்த நிறுவனத்தின் பொறுப்பின்மையை காட்டுகிறது. இந்த விளம்பரம் பாஜக வை மட்டுமின்றி தேர்தல் வழிமுறைகளையும், நோட்டாவின் தேவையையும் அவமானப் படுத்தி உள்ளது. அவர்கள் இந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும். அந்த தொலைபேசி பதிவு என்பது அந்த நிறுவனம் தங்களுக்கு மேலும் விளம்பரம் தேடிக் கொள்ள வெளியிட்டுள்ள ஒரு மலிவான விஷயம்” என கூறி உள்ளார்.
ஆனால் அந்த டிராப் டாக்சி நிறுவனம் ”இந்த விளம்பரத்தை திரும்பப் பெற முடியாது. இது எங்களின் கருத்து உரிமை ஆகும். நாங்கள் அப்போதைய நிகழ்வை ஒட்டு பல விளம்பரஙகளை வெளியிட்டுள்ளோம். 2ஜி வழக்கின் தீர்ப்பு, ஆர் கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆகிய பலவற்றை பற்றியும் விளம்பரம் செய்துள்ளோம். இதில் உள்ள நகைச்சுவையை பாஜக புரிந்துக் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளது.