பாட்னா

பீகார் மாநிலத்தில் இந்துக்கள் பண்டிகை விடுமுறைகளை குறைத்ததாக அரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று பீகார் கல்வித்துறை வரும் 2024ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்காட்டியை வெளியிட்டது.  இந்த பட்டியலில் குறைவான விடுமுறை நாட்களே இருந்தன. ஆனால் கல்வித்துறை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 220 கற்பித்தல் நாட்களை உறுதி செய்யும் வகையில் இந்த நாட்காட்டி உருவாக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

பீகார் அரசு ஜென்மாஷ்டமி, ரக்சாபந்தன், ராமநவமி, சிவராத்திரி, தீஜ், வசந்த பஞ்சமி மற்றும் ஜிவித்புத்ரிகா ஆகிய இந்து பண்டிகைகளுக்கான விடுமுறையை ரத்து செய்ய உள்ளதாக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் இஸ்லாமியப் பண்டிகைகளான, ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு தலா மூன்று நாட்கள் விடுமுறையும், முகரம் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அஷ்வினி சவுபே தனது எக்ஸ் பக்கத்தில் , மகா கூட்டணியின் இந்துக்களுக்கு எதிரான முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது என்றும், பீகார் அரசு ஓட்டு வங்கிக்காகச் சனாதன தர்மத்தை வெறுக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

இதைப் போல் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்,

“நிதிஷ்குமார் அரசுக்குப் பித்துப்பிடித்துவிட்டது. இது திருப்திப்படுத்தும் அரசியல் என்பது தெளிவாக தெரிகிறது. இந்துக்களைச் சாதியின் அடிப்படையில் பிரிக்கிறீர்கள், இப்போது இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். 

உங்களின் இந்த நடவடிக்கை இந்துக்களுக்கு எதிரானது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் பாஜகவும் போராட்டத்தில் ஈடுபடும். மாநிலத்தை இஸ்லாமியமாக்க நிதிஷ்குமார் அரசு முயல்கிறது”

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.