புதுடெல்லி:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எந்தவொரு ‘மதச் சாயமும்’ பூச வேண்டாம் என்று தனது கட்சி பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செலவுகள் என பல்வேறு சிக்கல்களில் தற்போது இந்தியா சிக்கியுள்ளது. இதனைச் சமாளிக்க PM CARES Fund-க்கு நிதியுதவி அளிக்குமாறு பிரதமர் மோடி தனது தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு மூலமாக ட்வீட் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அறிவித்த வங்கிக் கணக்கிற்குப் பலரும் நிதியுதவி அளிக்கத் தொடங்கினர். பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் என உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளனர்

இந்தநிலையில் பாரதிய ஜனதா தொண்டர்கள் அனைவரும் பிரதமர் கொரோனா நிதிக்கு குறைந்தபட்சம் ரூ.100 யாவது அனுப்ப வேண்டும் என அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய ஜே.பி நட்டா, கட்சியில் பொறுப்பில் இருக்கும் எவரும் ஆத்திரமூட்டும் (அ) மக்களைப் பிளவுபடுத்தும் கருத்தை கூறக்கூடாது. மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.