பாட்னா
கடந்த 2016 ஆம் வருடம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க பாஜக அழைத்தாக அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றன. மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்துள்ளதாக அறிவித்தன. அன்று விடியற்காலையில் மகாராஷ்டிர ஆளுநர் பாஜக முதல்வரான தேவேந்திர பட்நாவிசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அவருடன் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றார்,. ஆனால் சில மணி நேரங்களுக்குள் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தங்கள் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என அறிவித்தார். பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவ் இளைய மகனுமான தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறிப்பாக பாஜக கட்சியில் இது போலக் கூட்டணியை உடைப்பது புதுமை இல்லை. எங்களுக்கும் இதே போல ஒரு நிலை கடந்த 2016 ஆம் வருடம் ஏற்பட்டது.
அப்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை ஆட்சி அமைக்க வேண்டும் என பாஜக கேட்டுக் கொண்டது. ஆனால் அதை நாங்கள் மறுத்து விட்டோம். அப்படி நடந்திருந்தால் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் முதல்வராகவும் தற்போதைய துணை முதல்வர் சுசில் மோடி எப்போதும் துணை முதல்வராகவும் இருந்திருப்பார். எனவே பாஜக எங்கள் கூட்டணியை உடைத்து அதிகார ஆசை கொண்ட சிலருடன் இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது.
பாஜகவின் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருந்தால் லாலுபிரசாத் யாதவ் இந்தியாவின் தற்போதைய அரிச்சந்திர ராஜாவாக இருந்திருப்பார். கால்நடைத் தீவன ஊழல் என்பது இரண்டு நிமிடங்களில் ரத்து செய்யப்பட்டு அப்படி ஒரு ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்.” எனக் கூறி உள்ளார்.
தேஜஸ்வி யாதவின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் பதில் ஏதும் அளிக்கவில்லை. நேற்று இரவு பீகார் மாநில துணை முதல்வர் சுசில் மோடி தனது டிவிட்டரில் கடந்த 15 வருடங்களாக லாலுபிரசாத் யாதவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களால் மாநிலம் பெரும் இழபடி சந்தித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.