போபால்

ர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வரும் சாத்வி பிரக்யா தாகூருக்குப் பொதுக்கூட்டத்தில் பேச பாஜக தடை விதித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் சாத்வி பிரக்யா தாகூர்.   இவர் தனக்கு புற்று நோய் உள்ளதாகக் கூறி சிகிச்சைக்காக ஜாமீனில் வெளி வந்தார்.   இவரை மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக போட்டியிட வைத்தது.   அப்போதைய தேர்தல் பிரசாரத்தில் இருந்தே இவருடைய சர்ச்சைக்குரிய  கருத்துக்கள் பாஜகவைச் சங்கடத்தில் ஆழ்த்தி வருகிறது.

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவை சாத்வி தேசபக்தர் எனக் கூறியது  முதல் சர்ச்சையைக் கிளப்பியது.   அதற்கு பாஜக மூத்த தலைவர்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி சாத்வி மன்னிப்புக் கேட்டார்.  அதன் பிறகு தன்னை மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்த ஹேமந்த் கர்கரே தனது சாபத்தினால் மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டதாக அடுத்த சர்ச்சையைக் கிளப்பினார்.

இதனால் சாத்வி வாயைத் திறந்தாலே அது சர்ச்சையில் முடியும் என பாஜகவினர் கருதத் தொடங்கினார்கள்.    பாஜக மூத்த தலைவர்கள் சமீபத்தில் தொடர்ந்து உடல்நிலை சரியில்லாததால் மரணம் அடைந்து  வருகின்றனர்.    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மத்திய முன்னாள் அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி, முன்னாள் ம பி முதல்வர் பாபுலால் கவுr ஆகியோர் மரணம் குறித்து சாத்வி சர்ச்சையை உண்டாகும் விதத்தில் கருத்து தெரிவித்தார்.

அவர்,, “என்னை மக்களவை தேர்தல் நேரத்தில் ஒரு சன்னியாசி சந்தித்தார்.  அவர் எதிர்க்கட்சியினர் பாஜக மீது துர் தேவதைகள் மூலம் சூனியம் வைத்துள்ளதாகவும் இதனால் பாஜகவின் திறமை மிகுந்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணம் அடைவார்கள் எனக் கூறினார்.  நான் அதை அப்போது நம்பவில்லை.   ஆனால் தற்போது பாஜக தலைவர்கள் தொடர்ந்து மரணம் அடைந்து வருகின்றனர்.  இதை யாரும் நம்பவில்லை  எனினும் எனக்கு உண்மையாகத் தெரிகிறது” என அடுத்த சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறார்.

அதன் பிறகு ம பி மாநில பாஜகவினர் ஒதுக்கத் தொடங்கி உள்ளனர்.  சமீபத்தில் நடந்த இரங்கல் கூட்டத்தில் அவர் ஓரிரு வார்த்தைகள் பேச விரும்புவதாகக் கோரிக்கை விடுத்தும் அவரை உள்ளூர்  தலைவர்கள் பேச அனுமதிக்கவில்லை.   இது குறித்து ஒரு மூத்த தலைவர், “பாபுலால் கவுர் போபாலைச் சேர்ந்த தலைவர் ஆவார்.  போபால் மக்களவை உறுப்பினர் என்பதால் சாத்வி அந்தக் கூட்டத்தில் பேச வேண்டியது சரியானதாகும்  ஆனால்  சாத்வி எதைப் பேசினாலும் சர்ச்சையில் முடிகிறது.  எனவே அவரைப் பேச அனுமதிக்கவில்லை”எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச பாஜக தலைவர் ராகேஷ் சிங் சமீபத்தில் சாத்வி எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் மற்றும் பொதுமக்களிடம் பேசக் கூடாது எனத் தடை விதித்துள்ளார்.    அவர் இதை மீறினால் அவர் மீது கட்சி  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் என அவர் சாத்வியிடம் தெரிவித்துள்ளார்.