டேராடூன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சி நிதி திரட்ட பாஜக மும்முரமாக ஏற்பாடு செய்துள்ளது

ஒவ்வொரு கட்சியும் கட்சி நிதி திரட்டுவது என்பதை முக்கியமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    பல தொழிலதிபர்கள்,  பணக்காரர்கள்,  தொண்டர்கள் என யாரையும் எந்தக் கட்சியும் விட்டு வைப்பது இல்லை.    அதுவும் ஆளும் கட்சியாக இருந்தால் தொழிலதிபர்கள் தாங்களாகவே கட்சி நிதி அளிப்பது வழக்ககமாகி வருகிறது.

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநில பாஜக தனது சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் ஒன்றை டேராடூனில் நடத்தியது.   இந்த கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கட்சிக்கு நிதி வசூலிக்க ஒவ்வொரு தொகை நிர்ணயக்கப் பட்டது.    வரும் 26ஆம் தேதிக்குள் ரூ.25 கோடி நிதி திரட்டி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். உத்தரகாண்ட் மாஇல காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் சூர்யகாந்த், “மக்களின் பிரச்னை பற்றி எந்த ஒரு கவலையும் படாமல்  பாஜக தனது கட்சிக்கு நிதி திரட்டுவதில் மும்முரமாக உள்ளது.  மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு பணி புரிவார்களா அல்லது கட்சிக்கு நிதி திரட்டுவார்களா?”  எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதற்கு பாஜக மாநில காரியதரிசி அஜய் பட், “அனைத்துக் கட்சிகளுக்குமே நிதி தேவைப்படுகிறது.   முன்பு நாங்கள் எங்கள் கட்சி தொண்டர்களிடம் நிதி வசூலித்து வந்தோம்.   ஆனால் இப்போது பொதுமக்களிடமும் நிதி வசூலிக்கிறோம்.   நிதியை நாங்கள் காசோலை அல்லது வரைவோலை மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்கிறோம்.   அரசு ஊழியர்களிடம் இருந்து நிதி பெற்றுக் கொள்வதில்லை.   எனவே மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளில் எந்த ஒரு தடங்கலும் வராது”  என பதில் அளித்துள்ளார்.