டெல்லி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்க பாஜக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விண்ணப்பம் அளித்துள்ளன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக பாஜக, காங்கிரஸ், தே.மு.தி.க., பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அந்த கட்சிகள் சார்பில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கவும் விண்ணப்பிக்கப்பட்டது.  நேற்று இந்த நிலையில் அந்த விண்ணப்ப விவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

அதன்படி தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஷ்கார், அரியானா, தெலுங்கானா மற்றும் மராட்டிய மாநிலங்களில் 8 மக்களவை தொகுதிகளில் 92 வாக்குச்சாவடிகளின் எந்திரங்கள் சரிபார்க்க கோரப்பட்டு உள்ளன. ஆந்திரா மற்றும் ஒடிசாவில் 3 சட்டசபை தொகுதிகளில் 26 வாக்குச்சாவடிகளின் எந்திரங்களும் சரிபார்க்க கோரப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை விருதுநகர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் சட்டசபை தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளின் மின்னணு எந்திரங்களை சரிபார்க்க தே.மு.தி.க. விண்ணப்பித்து உள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடியில் எந்திரங்களை சரிபார்க்க பா.ஜனதா விண்ணப்பித்து இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள் இந்த ஒருங்கிணைந்த பட்டியலை தலைமை தேர்தல் கமிஷனுக்கு மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. 15 நாட்களுக்கு முன்னதாகவே மாநில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து விட்டதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சரிபார்க்க கோரும் விண்ணப்பங்களை 45 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்பதால் இதற்கான கடைசி நாள் ஜூலை 19-ந் தேதி ஆகும். விண்ணப்ப மனுக்கள் உறுதி செய்யப்பட்ட 4 வாரங்களுக்குள் எந்திர சரிபார்ப்பு பணிகள் தொடங்கும் என்றும், அதற்கு முந்தைய 2 வாரத்தில் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.