பாட்னா

நேற்று முன் தினம் நடந்த போரில் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர் சடலத்தை பெற்றுக் கொள்ள விமான நிலையத்துக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளில் யாரும் வரவில்லை.

நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நால்வர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவரான சிஆர்பிஎஃப் இன்ஸ்பெக்டர் பிண்டு குமார் என்பவரும் ஒருவர் ஆவார். இவர் பீகாரை சேர்ந்தவர். அவருடைய உடல் விமானம் மூலம் இன்று பாட்னாவுக்கு அனுப்பப்பட்டது.

தீவிரவாத தாக்குதலில் மறைந்த வீரர் பிண்டுகுமாரின் உடலை பெற்றுக் கொள்ளஅல்லது இறுதி மரியாதை செலுத்த பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி செய்யும் பீகார் மாநில அமைச்சர்களோ அல்லது எந்த பிரமுகரும் விமான நிலையத்துக்கு வரவில்லை.

இது குறித்து விசாரித்த போது பிரதமர் மோடியின் பீகார் மாநில தேர்தல் பிரசார பயணத்தையும் மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பிரசாரப் பயணத்தையும் முன்னிட்டு அனைத்து பிரமுகர்களும் அவரகளுடன் இருந்தது தெரிய வந்துள்ளது.

இது பீகார் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது. இது குறித்து பீகார் மக்கள், “தேச பற்றை பற்றி அடிக்கடி பாஜக பேசி வருகிறது. ஆனால் தேசத்துக்காக தன் உயிரை நீத்த சிஆர்பிஎஃப் வீரருக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூட பாஜகவினருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் நேரமின்றி போய் விட்டது.” என தெரிவித்துள்ளனர்.