ஜெய்ப்பூர் :

த்திய அரசு அண்மையில் கொண்டு வந்துள்ள விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலிதளம் கட்சி விலகி விட்டது.

இப்போது ராஜஸ்தானில் உள்ள பிராந்திய கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சியும், “விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

“டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நிபந்தனையின்றி பேச்சு நடத்துவதுடன், விவசாயிகளுக்கு எதிரான மூன்று கறுப்பு சட்டங்களையும் விலக்கி கொள்ள வேண்டும்” என லோக்தந்திரிக் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஹனுமான் பெனிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை கேட்டுக்கொண்டுள்ளார்.

“விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பெனிவால், நாகர் மக்களைவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார். அந்த கட்சிக்கு ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஜாட் சமூகத்தினரிடையே செல்வாக்குள்ள இந்த கட்சி சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

– பா. பாரதி