டெல்லி: வஃபு வாரிய திருத்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த மசோதாவுக்கு பா.ஜ.க கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் இரண்டு திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளது.
வஃபு சொத்துக்களை முறையாக கையாளும் வகையில், மத்தியஅரசு வஃபு திருத்த மசோதா கொண்டு வந்துள்ளது. இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பா.ஜ.க கூட்டணி கட்சிகளுல் ஒன்றான தெலுங்கு தேசம் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளது. இந்த மசோதாமீதான விவாதத்தின்போது, காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.
அப்போது, பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியும் மக்களவையில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. தெலுங்குதேசம் கட்சி எம்.பி.யான கிருஷ்ண பிரசாத் பேசும் போது, இந்த மசோதாவில் 2 திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என முன்மொழித்தார். அதன்படி,
- புதிய திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு பதிலாக நியாமான முறையில் முடிவுகள் எடுக்கும் வகையில் அதிக அதிகாரம் கொண்ட உயர் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
- மேலும் வஃபு சொத்து விவரங்களை 6 மாதங்களுக்குள் பதிவு செய்யவேண்டும் என்பது போதுமானது அல்ல. அதனை மேலும் அதிகரிக்க வேண்டும்
ஆகிய இரண்டு திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று கிருஷ்ண பிரசாத் MP வலியுறுத்தியுள்ளார்.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கூட்டணியின் முக்கிய அங்கமான தெலுங்கு தேசம் கட்சி (TDP), வக்ஃப் வாரியங்களின் அமைப்பில் மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது.
வக்ஃப் (திருத்த) மசோதா, 2024 மீதான மக்களவையின் விவாதத்தின் போது, தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக, தெலுங்கு தேசம் கட்சி எம்பி கிருஷ்ண பிரசாத் தென்னேட்டி பேசினார், மேலும் மசோதாவை ஆதரித்தார். “முஸ்லிம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக, அந்தந்த மாநிலங்களில் வாரியங்களை அமைப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கான பரிந்துரையை மையம் பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நடவடிக்கை, சமூகங்களின் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலனுக்கான தெலுங்கு தேசம் கட்சியின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும்,” என்று கூறியதாக செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, முஸ்லிம் சமூகத்தினரிடையே குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றுள்ளது. எனவே, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) கூட்டாளியாகவும், ஆந்திராவில் TDP தலைமையிலான அரசாங்கத்தில் ஒரு அமைச்சராகவும் இருந்தபோதிலும், மசோதாவை வெளிப்படையாக ஆதரிப்பதில் அது எச்சரிக்கையாக உள்ளது.