பாட்னா

பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் அதன் பீகார் மாநில கூட்டணிக் கட்சி ஐக்கிய ஜனதா தளம் 3 மக்களவை தொகுதியில் போட்டி இட உள்ளது.

நேற்று கூடிய ஐக்கிய ஜனதா தள தேசிய தலைமைக் குழு அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யவும், தொகுதி பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தவும் அதிகாரம் அளித்துள்ளது. அத்துடன் 2019 மக்களவை தேர்தலில் இந்த கட்சி பீகார் மாநிலத்தை தவிர உத்திரப் பிரதேசம், லட்சத்தீவுகள், மணிப்பூர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில தொகுதிகள் ஆகிய இடங்களில் போட்டியிட முடிவு எடுத்துள்ளது.

தற்போது மாநில கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் தேசிய கட்சி அந்தஸ்தை பெற இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. இந்த முடிவை ஒட்டி தற்போது பீகாரில் 17 மக்களவை தொகுதிகளில் போட்டியிட உள்ள ஐக்கிய ஜனதா தளம் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் 3 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. உ.பி யில் உள்ள பிலிபித், கான்பூர் புறநகர் மற்றும் ராபர்டாகஞ்ச் ஆகிய தொகுதிக்ளில் இக்கட்சி போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

ஐ ஜ த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், “இந்த குழு கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார் எங்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் பீகார் மாநிலத்தில் மட்டுமே கூட்டணி உள்ளது என்பதையும் வேறு மாநிலங்களில் இல்லை என்பதையும் தெரிவித்தார். அதனால் பீகார் தவிர மற்ற மாநிலங்களில் எங்கள் கட்சி விரும்பும் தொகுதிகளில் போட்டியிட தடை ஏதுமில்லை.” என தெரிவித்துள்ளார்.

நிதிஷ்குமார் பீகாரை தவிர மற்ற மாநில தலைவர்களுடன் தமது கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து விவாதித்துள்ளார். இந்த தொகுதிகளை கண்டறிய அவர் மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் கட்சியின் தேசிய துணைத்தலவர் பிரசாந்த் கிஷோர், தேசிய செயலர் கே சி தியாகி மற்றும் தேசிய பொதுச் செயலர் ஆர் சி பி சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில தொகுதிகள் குறித்து ஆராய அமகத் கான் மற்றும் சென்சுமோ லோதா ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரு குழுக்களும் தங்கள் அறிக்கையை நிதிஷ்குமாருக்கு அளிக்கும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் ஐ ஜ த போட்டியிட உள்ள தொகுதிகளை தேர்ந்தெடுக்க உள்ளார்.