அகர்தலா
பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் அணி கட்சி வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டி இடுகிறது.
திரிபுரா மாநிலத் தலைநகர் அகரதலாவுக்கு கடந்த ஜனவரி மாதம் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா வந்திருந்தார். திரிபுராவில் உள்ள கிழக்கு திரிபுரா தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யபட்ட தொகுதியாகும். பாஜகவின் கூட்டணி கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் அணிக்கட்சி அமித் ஷாவிடம் ஒரு மனுவை அளித்தது
அந்த மனுவில் தங்கள் கட்சிக்கு கிழக்கு திரிபுரா தொகுதியை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. அமித்ஷா இது குறித்து அவர்களுடன் விரைவில் பேசுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் அதன் பிறகு இந்த மனு குறித்து அமித்ஷா ஒன்றும் கூறவில்லை என தி உ ம அ கட்சி செயலர் டெப்பார்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது குறித்து டெப்பார்மா, “எங்கள் கட்சி இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய ஐந்து உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. எனது தலைமையிலான அந்த குழு தற்போது தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளது. எனவே நாங்கள் இம்மாநிலத்தில் உள்ள இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர் தேர்வு நடத்தி வருகிறோம்” என செய்தியாளர்களிட்ம தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளர் அசோக் சின்கா, “தி உ ம அ கட்சி மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்தது அக்கட்சியின் முடிவாகும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் முடிவு எடுக்க முழு உரிமை உள்ளது. அவ்வகையில் இந்த கட்சி இவ்வாறு முடிவு எடுத்துள்ளது. ஆனால் பாஜகவின் முடிவை டில்லியில் உள்ள மூத்த தலைவர்கள் தான் எடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.