டில்லி

கொரோனா தீவிரமாகப் பரவி வரும் நேரத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடந்தால் மக்கள் உடல் நலன் பாதிப்படையும் என பாஜகவின் கூட்டணிக் கட்சி லோக் ஜனசக்தி தெரிவித்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஆட்சி செய்து வருகிறது.  பீகார் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ளது.  அதனால் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் இதுவரை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை.

ஆயினும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள்  பிரசாரத்தை தொடங்கி உள்ளன.   பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம்  கூட்டணியில்  ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்றுள்ளது.   ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் இக்கட்சியின் தலைவர் ஆவார்.

சிராக் பாஸ்வான் டிவிட்டரில், “பீகாரில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   இதனால் மத்திய அரசு மற்றும் பீகார் மாநில அரசின் நிதி நிலை கடுமையாக  பாதிப்பு அடைந்துள்ளது.  தற்போது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது மாநிலத்துக்கு கடும் நிதி நெருக்கடியை உண்டாக்கும்.

இதுபோன்ற பல்வேறு சூழல்களையும் தேர்தல் ஆணையம் ஆராய வேண்டும்.  கொரோனா பரவும் இந்த நேரத்தில் தேர்தல் நடந்தால் மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிப்பு அடைவார்கள்.  கொரோனாவுக்கு பயந்து பலர் வாக்களிக்க வர மாடடார்கள் என்பதால்  வாக்குப்பதிவு சதவிகிதம் குறையும்.  இது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை.  தேர்தல் நடந்தாலும் எங்கள் கட்சி அதை எதிர்கொள்ள தயாராக உள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.