டெல்லி: மாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக, மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக ஆட்சி தக்க வைக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகள் வயநாடு உள்பட 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 13 மாநிலங்களில் அடங்கிய 48 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தல்களின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி, மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளதாகவும், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையிலும் உள்ளது. வயநாடு மக்களை இடைத்தேர்தலில், பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149 தொகுதிகளிலும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81 தொகுதிகளிலும், துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
காங்கிரஸ் தலைமையிலான ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா 95 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 86 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தனித்து 237 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவியது. இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 227 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 51 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதன் காரணமாக, அங்கு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வருவது உறுதியாகி உள்ளது.
‘மகாயுதி’ கூட்டணி
பாரதிய ஜனதா கட்சி – 125 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 56 இடங்களிலும், அஜித்பவார் தலைமையிலான 39 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி
அகில இந்திய தேசிய காங்கிரஸ் 21 இடங்களிலும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் கட்சி 12 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ(எம்) 2 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி – 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இதுவிர ஜன் சுராஜ்ய சக்தி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய யுவ ஸ்வாபிமான் கட்சி – 1 இடத்திலும், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) – 1 இடத்திலும், ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா – 1 இடத்திலும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.