சென்னை: கேரளா உள்பட பல மாநிலங்களில் பரவி வரும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்தில் கோழி மற்றும் முட்டை உற்பத்தில் முன்னணியில் திகழும் நாமக்கல் மண்டலம் பகுதியில் சுமார் 1 கோடி அளவிலான முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், கோழி பண்ணையாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
பறவைக் காய்ச்சல் அண்டை மாநிலமான கேரளாவில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வாத்து,கோழிகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டே அனுப்பப்படுகிறது. அதுபோல, கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து, முட்டை, தீவனங்கள் ஆகிய வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
பறவை காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் இருக்க தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் 6 மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை,திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சோதனை சாவடிகள் திறக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டு, தேவையன நடவடிக்களை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, நாடு முழுவதும் கோழி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி முட்டை விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளது. தற்போது நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இது நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
அதுபோல, நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலையும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.