புதுடெல்லி:

முத்தரப்பு பேச்சில் பங்கேற்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை, கொடூரமான மற்றும் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.


தொழிற்சங்க சட்ட திருத்த மசோதாவை அறிமுகம் செய்து வைத்து மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வர் பேசும்போது,”கொள்கைகளை உருவாக்கும் போது தொழிற்சங்கங்கள் சட்டரீதியாக இதுவரை பிரதிநிதித்துவம் பெற முடியாமல் இருந்தன. இந்த நிலை இனி மாறும்.

தொழிற்சங்கங்களை பதிவு செய்வற்கான சட்டதிருத்தம்தான் இது. தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் தருவதற்கல்ல. இந்த மசோதாவை கொண்டு வந்து அரசு ஏதும் செய்யப் போவதில்லை. இந்த மசோதா விவாதத்துக்கு வரும்போது, அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்படும். ஆறு தொழிற்சங்கங்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பெரும் பாதிப்பில்லை” என்றார்.

இந்த மசோதாவை சசிதரூர் (காங்கிரஸ்), எம்பி.ராஜேஸ் மற்றும் அனிருதன் சம்பத் (சிபிஎம்) மற்றம் என்.கே. பிரேம சந்திரன் (ஆர்எஸ்பி) ஆகியோர் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தனர்.

சசிதரூர் பேசும்போது, “இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு அனுப்பியிருக்க வேண்டும். அரசுக்கு சாதகமான நிலை எடுக்கவே இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்படுகிறது.

இது ஜனநாயகத்துக்கு எதிரானது.
இந்த மசோதாவைக் கொண்டு வருவதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இந்த அவையின் விதியையும் மாண்பையும் மீறுவதாக உள்ளது. இத்தகைய அதிகாரம் ஒருதலைப்பட்சமானது” என்று குற்றஞ்சாட்டினார்.

:”2 நாட்களாக அனைத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. முத்தரப்பு பேச்சில் பங்கேற்கும் தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான அடிப்படை வரம்பு என்ன?” என பிரேமசந்திரன் கேள்வி எழுப்பினார்.

இந்த மசோதா நிறைவேறியதும், எதிர்ப்புத் தெரிவித்து சிபிஎம் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்த மசோதா குறித்து அரசு தரப்பில் கூறும்போது, ”மத்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்களை முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்க வழி செய்யும் வகையில் தான் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் துறையில் நல்லிணக்கத்தைப் பேணும் வகையிலேயே இந்த சட்டதிருத்த மசோதா அமைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.