உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று 2022ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு விடும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டைச் சேர்ந்த செய்தித்தாள் கெஜெட்டா வைபோர்க்சா மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பாளரான டி.வி.என் 24 க்கு அளித்த பேட்டியின்போது, தொற்று பரவல் மற்றும் அதன் பாதிப்பு இது ஒரு எதிர்பார்த்திராத சோகம் என்றவர், 2022ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்தப்பட்டு, உலக நாடுகள் சகஜநிலைக்கு திரும்பும் என்று கூறியுள்ளார்.
“கொரோனா பேரிடர் என்பது ஒரு நம்பமுடியாத சோகம் / நமது மனதில் பதிந்துள்ள ஆறாத ரணம்” என்று குறிப்பிட்டுள்ள அவர், “ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கொரோனாவை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் பயன்பாட்டால் 2022 இறுதிக்குள் உலகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே பில்கேட்ஸ் அமெரிக்காவின் வயர்டு இதழுக்கு அளித்துள்ள பேட்டியின்போது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவு தலைகீழாக மாற்றுவது கடினம். நோய்களை அளவிடுதல், புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பூசி ஆராய்ச்சி ஆகியவற்றில் கொரோனா தொற்று புதுமைகளை திறந்து வைத்துள்ளது. பணக்கார உலகத்தால் பெரும்பாலும் 2021ம் ஆண்டின் இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர முடியும். மேலும் 2022ம் ஆண்டின் இறுதியில் கொடிய கொரோனா தொற்றின் முடிவை உலகம் முழுவதும் காணமுடியும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.