டில்லி

சில குறிப்பிட நபர்களின் அடையாளங்களை மரபணு மூலம் கண்டறிய வழி வகுக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபரின் மரபணு (டி என் ஏ) என்பது தனிப்பட்ட அடையாளம் ஆகும்.   இதன் மூலம் அந்த நபர் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினர் விவரங்களும் அறிய முடியும்.   இந்த மரபணு குறித்த சட்டங்கள் எதுவும் இதுவரை தெளிவாக இல்லை.   இந்த மரபணு சட்டத்தை தெளிவு படுத்தும் வகையில் புதிய சட்ட மசோதா ஒன்று இயற்றப்பட்டுள்ளது.

இந்த மரபணு ஒழுங்கு முறை சட்டம் 2019 இன் மசோதா இன்று மக்களவையில் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் வர்தான் தாக்கல் செய்தார்.   இந்த சட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட நபரின் அடையாளங்களை மரபணு சோதனை மூலம் கண்டறிய இந்த சட்டத்தில் வழி வகுக்கும் வரையில் இந்த மசோதா அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குற்றவாளிகள், குற்றம் சாட்டப்பட்டோர், குற்றத்தால் பாதிக்கப் பட்டோர், காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாமல் மரணம் அடைந்தவர்கள் ஆகியோரின் அடையாளத்துக்கு மரபணுவை உபயோகிக்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.   அத்துடன் மரபணுவை சோதிக்கும் முறைகள் பற்றிய ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மரபணு பரிசோதனை மூலம் பல குற்றங்களை நிரூபிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் இந்த சட்டம் இயற்றப்பட்டால் உள்துறை, பாதுகாப்புத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை ஆகியவைகளுடன் சிபிஐ உள்ளிட்ட  அமைப்புகளும் பயன் அடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ்  மூத்த தலைவரான சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அவர், “இது அரசின் பெரியண்ணன் மனப்பான்மையை எதிரொலிக்கிறது.   இந்த சட்டத்தை இயற்றுவதால் தனித்துவ உரிமைச் சட்டம் அடிப்ட வாய்ப்பு உள்ளது.   அத்துடன் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையான டி என் ஏ வை அரசு தவறாக கையாளவும் வாய்ப்பு உளது.

இதன் மூலம் ஏற்கனவே நாம் எதை சாப்பிட வேண்டும், யாருடன் பழக வேண்டும்,  யாரை நேசிக்க வேண்டும் என கட்டுப்படுத்தும் அரசு நமது மரபணுவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது.   இது மிகவும் தவறான ஒரு சட்டம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.