டெல்லி: குஜராத் மாநில அரசு, பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்தியஅரசு, குஜராத் அரசு பதில் அளிக்க  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளுக்கு விடுதலை அளித்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து சிபிஐ (எம்) எம்பி சுபாசினி அலி, பத்திரிகையாளர் ரேவதி லால் மற்றும் பேராசிரியர் ரூப் ரேகா வர்மா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது.

2002ம் ஆண்டு கோத்ரா  இனக்கலவரத்தின்போது,  5 மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட 14 பேர் அன்றைய கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த  2008ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில்,  நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலஅரசின் நன்னடத்தை விதிகளின்படி,  கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநில அரசின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது, தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி அஜய் ரஸ்தோகி, நீதிபதி விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது,  குற்றவாளிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட விவகாரம் சட்டப்படி நடைபெற்றதா என்பது குறித்து விசாரிக்கப்படும் என  தெரிவித்தார்.

இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளும் ஒரு தரப்பாக கருதப்படுவார்கள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும், குஜராத் மாநில அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை 2 வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்துள்ளனர்.