கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது என்று நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல பரிமாண வறுமைக் குறியீடு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று சமமான பரிமாணங்களைக் கொண்டுள்ளது – இவை ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் இளம்பருவ இறப்பு, பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, பள்ளிப் பருவ ஆண்டுகள், பள்ளி வருகை, சமையல் எரிபொருள், சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீடு, சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள்.போன்ற 12 அளவீடுகளால் குறிப்பிடப்படுகின்றன.

இந்த அளவீடுகளின் அடிப்படையில், இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலமாக 51.91 புள்ளிகளுடன் பீகார் முதலிடத்தில் உள்ளது, 42.16 புள்ளிகளுடன் ஜார்கண்ட் மாநிலம் இரண்டாவது இடத்திலும், 37.79 புள்ளிகளுடன் உத்தர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசம் (36.65) நான்காவது இடத்திலும், மேகாலயா (32.67) ஐந்தாவது இடத்திலும்
உள்ளது.

இதே பட்டியலில் கேரளா கடைசியாக இடம்பெற்றுள்ளது, கணக்கெடுப்பு அளவீடுகளின் அடிப்படையில் முன்னேறிய மாநிலமாக உள்ள கேரளா இந்த பட்டியலில் 0.71 புள்ளிகளுடன் கடைசியில் உள்ளது.

இதற்கு அடுத்த நிலையில், சிக்கிம் 3.82 புள்ளிகள், தமிழ்நாடு 4.89 புள்ளிகள் பஞ்சாப் 5.59 புள்ளிகளுடன் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

இந்தியாவின் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டின் வளர்ச்சியானது, பல பரிமாண வறுமையைக் கண்காணித்து, சான்றுகள் சார்ந்த மற்றும் கவனம் செலுத்தும் தலையீடுகளைத் தெரிவிக்கும் பொதுக் கொள்கைக் கருவியை நிறுவுவதில் ஒரு முக்கிய பங்களிப்பாகும் என்று நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறியீடு 2015-16 ம் ஆண்டு எடுக்கப்பட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு அளவீடு ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி (OPHI) மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வலுவான வழிமுறையைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.