டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். அதன்படி, மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதுபோல, தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் அதியை அறிவித்து உள்ளது. இன்று டெல்லியில், செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகள் மற்றும் தேர்தல் கட்டுப்பாடுகளையும் அறிவித்தார்.
அதன்படி, பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.
முதல்கட்ட தேர்தல் அக்டோபர் 28ந்தேதி
2வது கட்ட தேர்தல் நவம்பர் 3ந்தேதி
3வது கட்ட தேர்தல் நவம்பர் 7ந்தேதி
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10ந்தேதி
வழக்கமாக மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 71 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
2வது கட்ட தேர்தல் 17 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
3வது கட்ட தேர்தல் 15 மாவட்டங்களில் சேர்ந்த 78 தொகுதிகளில் நடைபெற உள்ளது.
மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 243 . இவற்றில் 38 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும்.
இந்த சட்டமன்ற தேர்தலில் 7.29 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்.
பெரும்பாலான தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இதுவரை 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி மையம் என்பதை மாற்றி, தற்போது 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
வாக்காளர்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில், 7 லட்சம் கிருமிநாசினி வழங்கும் அமைப்பு, 46 லட்சம் முகக்கவசம், 6 லட்சம் தற்பாதுகாப்புக் கவசம், 6.7 லட்சம் முகப்பாதுகாப்புக் கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் வீடு வீடாக வாக்குச் சேகரிக்க செல்லும் போது 5 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும். 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆன்லைன் மூலம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.