பாட்னா
பீகாரில் ஒரு தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத மாணவிகள் இருவரின் சீருடையை அவிழ்த்து அரை நிர்வாணமாக தெருவில் துரத்திய அவலம் நடந்துள்ளது.,
பீகாரின் தலைநகரான பாட்னா நகரில் இருந்து 125 கிமீ தூரத்தில் உள்ள ஒரு நகரில், தனியார் பள்ளியில் ஒரு ஏழைத்தொழிலாளியின் இரு மகள்கள் படித்து வந்தனர். ஒரு பெண் நர்சரி வகுப்பிலும், மற்றவர் ஒன்றாம் வகுப்பிலும் படித்து வந்தனர். தான் படிக்கவில்லை எனினும் தன் மகள்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதால் அந்தக் குழந்தைகளை அந்தப் பள்ளியில் சேர்த்த தந்தையால் சீருடைக் கட்டணம் உட்பட எந்தக் கட்டணத்தையும் சரிவர செலுத்த முடியவில்லை.
பள்ளி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆசிரியை ஒருவர், அந்த இரு மாணவிகளின் சீருடையை அவிழ்த்து, அரை நிர்வாணமாக இரு மாணவிகளையும் பள்ளியை விட்டு வெளியேற்றினார். அரை நிர்வாணமாக தெருவில் சென்ற குழந்தைகளின் மேல் இரக்கம் கொண்ட ஒருவர் உடை கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒரு தொலைக்காட்சி சேனலில் வெளியானதை தொடர்ந்து அது பரவ ஆரம்பித்தது.
போலீசார் தற்போது பள்ளி நிர்வாகியையும் அந்த ஆசிரியையும் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்
போலீசார் கொடுத்த தகவலின் படி, ஆசிரியை, அந்த மாணவிகளின் தந்தையை அழைத்து சீருடைக் கட்டணத்தையாவது உடனே செலுத்தச் சொல்லி இருக்கிறார். பணம் இல்லாத தந்தை அதற்கு கால அவகாசம் கேட்க, அதை ஆசிரியர் மறுத்துள்ளார். பிறகு அனைத்து மாணவிகளின் முன்னிலையில் உடைகளை அவிழ்த்து சீருடை கட்டணம் கட்ட முடியாத நீங்கள் சீருடை இன்றி சாலையில் செல்லுங்கள் எனக் கூறி விரட்டி இருக்கிறார்.
அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதை விட ஆங்கோர் ஏழைக்கு கல்வி பயிற்றுவித்தலே பெரும் புண்ணியம் எனச் சொன்ன மகாகவி பாரதியின் வரிகள் நமக்கு இதைப் படித்ததும் நினவுக்கு வருகிறது.