பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்து வந்த முழு மதுவிலக்கை அம் மாநில பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளக் கட்சி தலைமையிலான மதச்சார்பற்ற மகா கூட்டணி, அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
மதச்சார்பற்ற மகா கூட்டணி சார்பில் “பிகாரில் பூரண மதுவிலக்கு’ என்ற வாக்குறுதியை முதல்வர் வேட்பாளர் நிதீஷ்குமார் அறிவித்தார். அதன்படி, வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
கடந்த எப்ரல 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்து நடைமுறையில் உள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் பீகாரை பின்பற்றி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பீகாரில் மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும என்று பாட்னா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஏ.என்.சிங் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். ஒருவரது உணவுப் பழக்கத்தை அரசு தீர்மானிக்க முடியாது என்று தனது மனுவில் ஏ.என்.சிங் வலியுறுத்தியிருந்தார்.
இந்த பொதுநலன் வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் இன்று நிதிஷ்குமார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு அமல் சட்டம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.