சென்னை: திருப்பூரில் சிக்கி தவிக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பல மாநிலங்களில் உள்ள மற்ற மாநில தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் மங்கலம் சாலையில் உள்ள கோழி பண்ணை ஒன்றில் வேலையில் இருக்கும் பீகார் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகின.

இது பற்றிய தகவல் பீகாரில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

டுவிட்டர் வழியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஏற்கனவே அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்பட்டு விட்டன, அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அனுப்பி இருக்கிறார்.