பீகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கணேசபுரா எனும் கிராமத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் மின்சாரம் நின்று போன நிலையில், அக்கம் பக்கத்து கிராமத்தினரிடம் விசாரித்ததில் அந்த கிராமங்களில் அதுபோல் மின்சாரம் ஏதும் தடைபடுவதில்லை என்று தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து விசாரணையில் இறங்கிய அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மின்சாரத்தை துண்டித்து விட்டு கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் காதலியுடன் குலவிக்கொண்டிருந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர்.
அதே கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் அந்த இளைஞரிடம் விசாரித்ததில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்தது அவர் தான் என்பது தெரியவந்தது.
உண்மை வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து அந்த இளைஞரை நையப் புடைத்த கிராமத்தினர் அவருக்கு மொட்டையடித்து தண்டனை கொடுத்தனர். பின்னர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் அந்த பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து அந்த பகுதி போலீசாருக்கு தெரிந்த போதும் இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் அந்த இளைஞர் மீது மேலும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.