பாட்னா: நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ், பீகார் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 28ம் முதல் 3 கட்டங்களாக பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் நாட்டின் முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாவார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தங்கப்பதக்கம் வென்றவர் மோனிகா தாஸ். 32 வயதாகும் அவர், 2015ம் ஆண்டு முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வரும் மாநிலத்தின் முதல் திருநங்கை ஆவார்.
தற்போது தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதன் மூலமாக, நாட்டிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்த மாநிலம் என்ற பெருமையை பீகார் பெற்றுள்ளது.
தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டது குறித்து, திருநங்கைகளுக்கான தேசிய கவுன்சிலின் உறுப்பினர் ரேஷ்மா பிரசாத் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது அனைத்து திருநங்கைகளுக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்று கூறி உள்ளார்.
முன்னதாக 2016 ஆம் ஆண்டில், திருநங்கையான ரியா சர்க்கார், மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.