பாட்னா :
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.
இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இந்த கூட்டணியே தேர்தலில் வெல்லும் என்றும், ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்-அமைச்சர் ஆவார் என்றும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
நாளை ஓட்டு எண்ணிகை நடைபெறுவதை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு தேஜஸ்வி யாதவ், பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அவரது ஆர்.ஜே.டி. கட்சியின் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ஓட்டு எண்ணிக்கையின் போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
“வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடிக்கக்கூடாது. வண்ணப்பொடிகளை தூவக்கூடாது. எதிர்க்கட்சிகளிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் தொண்டர்களை ஆர்.ஜே.டி. கட்சி கண்டிப்புடன் கூறியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது “ஆர்.ஜே.டி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பீகாரில் சட்டம்-ஒழங்கு சீர் குலையும்” என ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.கவினர் கூறிவந்த நிலையில் லாலு பிரசாத் கட்சி, தனது தொண்டர்களை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– பா. பாரதி