பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது. மணிக்கு மணி வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா, அல்லது தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய மெகா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான கூட்டணியே முன்னிலை வகித்துவந்தது. பெரும்பானமையை நிரூபிக்க 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம் எனும் நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் மகா கூட்டணி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காலை 10 மணி நிலவரப்படி பிகார் தேர்தலில் இரு கூட்டணிகளும் சமமான இடத்திற்கு நகர்ந்து வருகின்றன. மகா கூட்டணி 114 இடங்களிலும், பாஜக கூட்டணி 111 இடங்களிலும் முன்னிலை வகித்தன. அதுபோல, தனித்து போட்டியிடும் பஸ்வானின் கட்சியான லோக் ஜனசக்தியும் 8 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
அதையடுத்து காலை 10.30 மணி நிலவரப்படி நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 125 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.