டெல்லி:

த்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவளித்த பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தற்போது கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். சரியான திட்டமிடலுடன் பலமான எதிர்ப்பு இயக்கத்தை தொடங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பேசிய பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், மத்திய அரசு முன்யோசனை இல்லாமல் செய்ததுதான் பணமதிப்பு நீக்கம். மக்கள் கவனத்தை திசைதிருப்பும் உத்தியாக பணமதிப்புநீக்க நடவடிக்கையை மத்திய அரசு கையாண்டதாக குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பணமதிப்புநீக்க நடவடிக்கைக்கு ஆதரவளித்ததோடு, கருப்புப் பணம், கள்ளப்பணம் மற்றும் ஊழல் ஒழியும் என்று கூறினார். அதனால்தான், தான் ஆதரித்ததாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

ஆனால் மத்தியஅரசு பணமற்ற சமுதாயத்தை உருவாக்குவதாக இப்போது மாற்றி பேசுகிறது. அதை இந்தியாவில் நடைமுறைபடுத்துவது  இயலாத காரியம் என்று நிதிஷ்குமார் கூறினார். இந்த நடவடிக்கை தோல்வியில் முடிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதுவரை எவ்வளவு கருப்புப் பணம் வந்துள்ளது? பழைய நோட்டுகள் எவ்வளவு திரும்ப பெறப்பட்டுள்ளன? பணமதிப்புநீக்க நடவடிக்கை ஏற்படுத்திய சாதனை என்ன?  போன்ற விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும் நிதிஷ்குமார் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, மார்க்ஸிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.