பாட்னா:

நீதிமன்றங்கள் விதித்துள்ள தூக்கு தண்டனைகளை நிறைவேற்றும் வகையில், தூக்குக்கயிறுகள் தயாரித்து தரும்படி, பீகார் ஜெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு மாநில சிறைத்துறை தரப்பில் இருந்து ஆர்டர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள், கொலைக்குற்றங்கள் போன்றவற்றை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் தூக்குத்தண்டனை வழங்கி  வருகிறது. ஏற்கனவே இந்திய பாராளுமன்றத்தின்மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அப்சல்குருவுக்கு 2013ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பிறகு தூக்குத் தண்டனை ஏதும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப் பட்டவர்கள் 4 பேரும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது விசாரணை நடத்தி விரைவில் தீர்ப்பு கூறப்பட வேண்டும் என்றும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்து வருகிறது.

இந்த நிலையில், பல மாநில சிறை நிர்வாகங்கள் தூக்குதண்டனை கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் வகையில், தூக்குக் கயிறுகள் தயாரிக்க ,  பீகார் மாநிலம் பக்சர் என்ற இடத்தில் உள்ள ஜெயில் நிர்வாகத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான ஜெயில்களில் கைதிகளை தூக்கில் போடுவதற்கான வசதி உள்ளது. ஆனாலும், அந்த ஜெயில்களில் தூக்குகயிறு தயாரிப்பது கிடையாது. ஒரு சில ஜெயில்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. அந்த வகையில் பக்சர் ஜெயிலிலும் தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  டெல்லி மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற வினைய் சர்மா  உள்பட பல கொடிய குற்றவாளிகள் விரைவில் தூக்கிடும் வகையில் தூக்கு கயிறு தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பீகாரில் உள்ள பக்சர்  சிறையில் , ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1930-ம் ஆண்டு முதல் இந்த ஜெயிலில் தூக்கு கயிறு தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தூக்கு கயிறு தயாரிப்பது எப்படி?

தூக்கு கயிறு தயாரிப்பதற்காக விசே‌ஷ விசைத்தறி எந்திரம் ஒன்றும் இந்த சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்மூலம்,  ஜெ-30 என்ற பருத்தி நூல் கொண்டு  தூக்கு கயிறு தயாரிக்கப்படுகிறது.

ஒரு கயிறு தயாரிப்பதற்கு 7,200 நூற்கண்டுகள் தேவைப்படுவதாகவும், அத்துடன் கயிறு வலிமையாக, தூக்கு போடப்படுபவரின் உடல் எடையை தாங்கும் வகையில், சில ரசாயணக் கலவை சேர்த்தும், இந்த கயிறு தயாரிக்கப்படுகிறது.

ஒரு தூக்கு கயிறின் நீளம் குறைந்தபட்சம் 16 அடி வரை இருக்கும். அது ஒவ்வொரு ஜெயிலில் உள்ள வசதிக்கு ஏற்றார் போல் இதன் நீளம் அதிகரிக்கவும், குறைக்கவும்  செய்யப்படும்.

ஒரு தூக்கு கயிறின் மொத்த எடை 150 கிலோ வரை இருப்பது உண்டு.

விசே‌ஷ தொழில்நுட்ப முறையில்  தயாரிக்கப்படும், ஒரு தூக்கு கயிறு தயாரிக்க   3 நாட்கள் ஆகும் என்றும், பலர் இணைந்தே இந்த கயிறை தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கயிறு தயாரிக்க குறைந்த பட்சம்  ரூ.1,700-ல் இருந்து ரூ 2 ஆயிரம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தூக்கு கயிறை, மணிலா கயிறு என்று அழைக்கப்படுவதும் உண்டு.