பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப் பட்டன. பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்ப நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால், கடந்த 5 மாதங்களாக பொதுப்போக்குவரத்து முடங்கி உள்ளன. இருந்தாலும், பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை மத்தியஅரசு வழங்கியுள்ளது. மேலும் சமீபத்தில், இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
பீகார் மாநிலத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களு டன் இயங்கலாம் என்றும் மதவழிபாட்டு தலங்கள் திறக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் பீகார் அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளது.
இதைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில், இன்றுமுதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சியுடனும், முகக்கவசம் அணிந்தும் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து கூறிய பயணி ஒருவர், “அரசாங்கம் பஸ் சேவைகளை மீண்டும் தொடங்கி இருப்பது நல்லது. ஆனால், இதில் சமூக தொலைதூர நடவடிக்கைகளைப் பின்பற்றுவது கடினம், ஆனாலும், நாங்கள் முயற்சி செய்கிறோம். சானிடிசர்களை கட்டாயமாக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே மகாராஷ்டிரா மாநிலத்திலும் பொதுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அங்கு MSRTC சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 18,000க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சுமார் 1 லட்சம் பேர் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.