பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் 3 கட்டமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து, அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகின்றன. இதற்கிடையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், நிதிஷ்குமார் தோல்வி அடைய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியானதால், அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டு உள்ளது.
பீகாரில் கடந்த 10 ஆண்டுகளாக நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு நிகழ்வுகளில் அவர் பாரதியஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதால், பொதுமக்களிடையே பாஜக மீதான வெறுப்பு நிதிஷ்குமார் ஆட்சியின் மீது ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான், அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன.
மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய வாக்குபதிவில் 55.69% வாக்குகள் பதிவாயின. அதையடுத்து 2வது கட்ட தேர்தல் நவம்பர் 3ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினம் 55.70% வாக்குகள் மட்டுமே பதிவாகின. இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் 3வது கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ந்தேதி நடைபெற்றது. அன்றைய தினமும் 57.91% வாக்குள் மட்டுமே பதிவாகினது.
இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகன் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதளம் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் கொண்ட மெகா கூட்டணியும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சிகள் கொண்ட நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டிகள் நிலவி வந்தன.
மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இந்த இரு கூட்டணி கட்சிகளும் இடையே கடுமையான போட்டிகள் நிலவிய நிலையில், லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது. அதே வேளையில் தற்போதைய முதல்வரான நிதிஷ்குமாருக்கு சில பகுதிகளில் பலத்த வரவேற்பு இருந்தாலும் சில பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்ததுடன், அவர்மீது வெங்காயம் வீச்சு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன. இதையடுத்து, இந்த தேர்தலுடன் தான் அரசியலில் இருந்து ஒதுக்கப்போவதாக அறிவித்து, அனுதாப ஓட்டுக்களை பெற முயற்சித்த அவலங்களும் அரங்கேறின.
இந்த நிலையில்தான் தேர்லுக்கு பிந்ததைய கருத்துக்கணிப்பில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது. டைம்ஸ் நவ், ரிபப்ளிக், சி வோட்டர், என்.டி.டி.வி. ஆகிய ஊடங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 116 இடங்களை கைப்பற்றும் எனவும், மெகா கூட்டணி 120 இடங்களையும், லோக் ஜனசக்தி தலா 1 இடத்தையும், அதனைதொடர்ந்து மற்ற கட்சிகள் 6 இடங்களை கைப்பற்றும் தெரிவித்து உள்ளது.
அதுபோல, பீகார் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று 63 சதவீதம் தெரிவித்துள்ளதாகவும், நிதிஷ் குமாரின் ஆட்சி சராசரியாக இருப்பதாக 29 சதவீதம் பேரும், மோசமாக இருப்பதாக 37 சதவீத பெரும் சிறப்பாக இருப்பதாக 21 சதவீதம் பேர் தெரிவித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் நாளை பீகாரில் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
பீகாரில் நிதிஷ்குமார் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வாரா அல்லது, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆட்சியை கைப்பற்றுவாராஎன்பது நாளை மாலைக்குள் தெரியவரும்.