பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 12 மணி நிலவரம் வெளியாகி வருகிறது. மணிக்கு மணி வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா, அல்லது தேஜஸ்வி தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்கிய மெகா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதுபோலவே இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணியே முன்னிலை வகித்துவந்தது.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம் எனும் நிலையில் காலை 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் இடம்பெற்றிருக்கும் மகா கூட்டணி 119 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பின்னர் இரு கூட்டணிகளுக்கும் இடையே சில தொகுதிகளில் மட்டுமே இடைவெளி நீடித்து வந்த நிலையில், நெக் டூ நெக்காக இரு கூட்டணிகளும் ஒரே அளவிலான முன்னணியில் இருந்து வந்தன.
தற்போது மதியம் 12 மணி நிலவரப்படி, நிதிஷ்குமார் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த கூட்டணி 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே வேளையில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி காங்கிரஸ் 101 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்கத்தில் மகாபந்தன் கூட்டணி முன்னிலையில் இருந்து வந்த நேலையில், நேரம் ஆக ஆக பாஜக கூட்டணி முன்னிலை பெறத்தொடங்கி உள்ளது. அதுபோல, தனித்து போட்டியிடும் பஸ்வானின் கட்சியான லோக் ஜனசக்தி 4 இடங்களிலும், மற்ற கட்சகிள் 10 இடங்களிலும் முன்னணியில் இருந்து வருகின்றன.