2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ம் தேதி அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது, இதற்கு காரணமான அல் கொய்தா அமைப்பிற்கும் அந்த அமைப்பின் தலைவன் பின் லேடனுக்கும் எதிரான தேடுதல் வேட்டையை துவங்கியது அமெரிக்கா.
பின் லேடன் மற்றும் அல் கொய்தா அமைப்பிற்கு புகலிடம் கொடுத்த ஆப்கனின் தலிபான் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்த அமெரிக்கா தனது கூட்டுப்படையுடன் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது.
20 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், அமெரிக்காவின் அதிபர் பதவியை ஏற்ற ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் போர் மூலம் எந்த தீர்வையும் எட்ட முடியாது, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நமது படை வீரர்கள் அந்நிய மண்ணில் உயிரிழப்பது என்று பேசி வந்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் மாதம் 11 ம் தேதி, ஆப்கான் மண்ணை விட்டு அமெரிக்கப் படை வாபஸ் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் கூட்டுப்படைகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன, தற்போது அமெரிக்க படை மட்டுமே எஞ்சி இருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 31 ம் தேதியோடு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை வெளியேறும் என்ற புதிய அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் இன்று வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின் ஆப்கானில் உள்ள அரசும் தாலிபான்களும் ஆப்கானிஸ்தானின் அமைதிக்காவும் வளர்ச்சிக்காவும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நிய படையினரின் வாபஸ் குறித்த அறிவிப்பு வெளியாக துவங்கியதில் இருந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கை மீண்டும் ஓங்க ஆரம்பித்திருக்கும் நிலையில், ஆப்கனின் மூன்றின் இரண்டு பங்கு அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.