அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து அதனை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் பைடன் மேற்கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 26000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள பைடன் அரசு, புதிதாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் 100 டாலர் ஊக்கத்தொகை அளிக்க மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுருத்தியிருக்கிறார்.

தனியார் நிறுவனமொன்று தனது நிறுவன ஊழியர்களுக்கு இதுபோல் 100 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 7500 ரூபாய்) ஊக்கத்தொகை வழங்கியதை அடுத்து 50 விழுக்காடாக இருந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக அதிகரித்திருப்பதை வெள்ளை மாளிகை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்கள் வாரத்திற்கு ஒருமுறை கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிரடி உத்தரவிட்டிருக்கிறார் அதிபர் பைடன்.

டெல்டா வகை கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியிருப்பதோடு பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்