பூவராக பெருமாள் கோவில், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.
வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.
நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள், துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.
திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது, ஆனால் கீர்த்தி மிகப்பெரியது.
பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.