வாரணாசி
பனாரஸ் இந்து பல்கலைக்கழக கேள்வித்தாளில் பத்மாவதி, முத்தலாக் ஆகியவை பற்றிய இந்துத்வா கேள்விகளுக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சரித்திரத்தில் முதுகலை பயில்வோருக்கான செமஸ்டர் தேர்வு சமீபத்தில் நடந்துள்ளது. அதில் தற்போதைய நிகழ்வுகளை ஒட்டி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கேள்விகள் இந்துத்வாவை முன்னிறுத்தி கேட்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கண்டனம் தெரிவித்துல்ளனர்.
அதில் ஒரு கேள்வி ”அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் ராணி பத்மாவதி தீக்குளித்ததை பற்றி விளக்குக” என்பதாகும். இது பழங்கால ராணி பத்மாவதியை பற்றிய கேள்வி போல தோற்றமளித்தாலும் அது தற்போது சர்ச்சைக்குள்ளாகிய பத்மாவதி இந்தி திரைப்படத்தையும் அந்தப் படத்தை தடை செய்ய இந்து அமைப்புக்கள் போராடி வருவதையும் குறித்தும் கேட்கப்பட்டுள்ளது என மாணவர்கள் கருது கின்றனர்.
மற்றொரு கேள்வி “முத்தலாக் மற்றும் ஹலாலா முறையால் இஸ்லாமிய சமூகத்தினர் படும் துயரத்தை விவரிக்கவும்” என்பதாகும். முத்தலாக் என்பது ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி ஒரு ஆண் பெண்ணை விவாகரத்து செய்வதாகும். ஹலாலா என்பது ஒரு இஸ்லாமியப் பெண் விவாகரத்துக்குப் பின் தனது முதல் கணவனை திருமணம் செய்ய விரும்பினால், அவள் மற்றொருவனை திருமணம் செய்து அவனுடன் வாழ்ந்து விட்டு விவாகரத்து செய்த பின்பே மணக்க முடியும் என்னும் பழக்கமாகும். இந்தக் கேள்வி கேட்கப்பட்டது இஸ்லாமியரை வேண்டும் என்றே கேவலம் செய்வதற்காகவே என மாணவர்கள் தெரிவித்துல்ளனர்.
அரசியல் விஞ்ஞானத்துறையில் (Political Science) முதுகலைப் பட்டப் படிப்பில் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வியில் “கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் ஜி எஸ் டி பற்றி வந்துள்ளதை பற்றி ஒரு கட்டுரை எழுதவும் அல்லது உலக மயமாக்கலின் முன்னோடி மனுதர்மத்தை எழுதிய மனு என ஒரு கட்டுரை எழுதவும்” என குரிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் மாணவர்களிடையே கண்டனத்தை எழுப்பி உள்ளது.
மாணவர்களில் ஒருவர், “இது போன்ற கேள்விகளின் மூலம் பல்கலைக்கழகம் இந்துத்வாவை புகுத்த நினைக்கிறது. அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தக் கேள்விகளால் தேவையற்ற மதக் கலவரம் நிகழலாம் என அஞ்சுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரித்திரத் துறையில் பணி புரியும் பேராசிரியர் ஒருவர், “இது போன்ற கேள்விகள் பல வருடங்களாக இந்தப் பல்கலைக்கழகத்தின் கலாச்சாரமாக விட்டது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் அது மேலும் அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்களால் இந்தப் பல்கலைக் கழகத்தில் இந்துத்வா திணிப்பு மிகவும் அதிகரித்துல்ளது. வெகு நாட்களாக நடந்து வரும் இந்த வழக்கம் இப்போது வெளியே தெரிந்ததற்கு நான் மிகவும் மகிழ்கிறேன்” எனக் கூறி உள்ளார்.