சென்னை:

திங்கட்கிழமை போகி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம்  பழைய பொருட்களை எரிக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ள னர்.

வீடுகளில் சேகரம் ஆகும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் ஏற்பட்ட காற்று மாசுபாடு இயற்கையால் ஜீரணிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், போகி பண்டிகை அன்று பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.

கடந்த ஆண்டு அதிக அளவு ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை மற்றும் குறைந்த அளவு காற்றின் வேகம் காரணமாக சென்னை மாநகராட்சி மண்டலங்களில் காற்றில் பி.எம்.10 துகள்களின் அளவு 135 முதல் 386 வரை மைக்ரோம்/கனமீட்டர் என்ற அளவில் இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாகும்.

போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு 9 பன்னாட்டு விமானங்கள் உள்பட 16 விமானங்கள் சென்னையில் இருந்து பிற விமான நிலையங்களான பெங்களூரு, ஐதராபாத் மற்றும் கோயம்புத்தூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 42 விமானங்கள் தாமதமாகவும் 40 விமானங்கள் ரத்தும் செய்யப்பட்டன.

சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது.

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுகளால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய் களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் புகை மண்டலம் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

எனவே இந்த ஆண்டு போகி பண்டிகைக்கு முன்தினம் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் 30 குழுக்கள் அமைத்து போலீசாருடன் இணைந்து அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.

போகி பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க மாசு கட்டுப் பாட்டு வாரியம் காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளி யிடப்படும்.

போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.