ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களைகட்டி உள்ள நிலையில்,  இடைத்தேர்தலை நிறுத்த பாரதிய ஜனதா சதி செய்கிறது திமுக முன்னாள் எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு  தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு போட்டியிடுகிறார். மேலும் நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். அங்கு அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும்கட்சி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவும், இதுதொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அதற்கான டவீடியோ ஆதாரங்களையும்,  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்மும் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதை ஆய்வு செய்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இநத் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,  ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கணக்கிடுகிறோம். அவரது வெற்றியை தடுத்து நிறுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சி சதி செய்கிறது. இதற்கு முன்பு அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை நிறுத்தியது போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் குறிக்கோளாக தெரிகிறது. அவ்வாறு தேர்தலை நிறுத்தினால் நாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம். அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.