டில்லி

கொரோனா பூஸ்டர் த்டடுப்பூசி எப்போது போட வேண்டும் என்பது குறித்து பாரத் பயோடெக் தலைவர் கிருஷ்ணா எல்லா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கடும் பாடுபட்டு வருகிறார்கள். இதற்கு மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  ஆயினும்  இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் இந்த தொற்று வீரியம் அதிகரித்து மேலும் பரவாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளையும் விடாமல் முயன்று கொண்டிருக்கின்றனர்.  இந்த ஆய்வுகளின் முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர்.  சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுப்பதற்காக மூக்கு வழியாகச் செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளதாகத் தகவல்கள் வந்தன.

இதை இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்திருந்தது.  இதற்கு அனுமதி கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.. இதே தடுப்பு மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, மலிவு விலையில் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்ஸ்பயோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டிவி சேனல் ஒன்றில் நடந்த நிகழ்வில், “இரண்டாவது தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது.. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் மூக்கு வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம்.  விரைவில் நாங்கள் நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியைக் கொண்டு வருகிறோம்.

கோவேக்சினை முதல் டோஸாக தந்துவிட்டு, இரண்டாவது டோஸாக நாசி வழியாகச் செலுத்துகிற தடுப்பூசியைத் தருவது குறித்துச் சிந்திக்கிறோம். கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.