டில்லி

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்குத் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் இழப்பீடு அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் போடுவது தொடங்கி உள்ளது.   இதற்காக சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்யும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் ஆகிய மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.   இந்த இரு மருந்துகளுக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனத்தின் தயாரிப்பாகும்.  இது அனைத்துக் கட்ட பரிசோதனைகளையும் முடித்துள்ளது.  கோவாக்சின் மருந்து பாரத் பயோடெக் தயாரிப்பாகும்.  இந்த மருந்து தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.  இன்னும்  பரிசோதனை முழுவதுமாக முடிவடையாததால் இந்த மருந்து குறித்து கடும் ஐயம் எழுந்துள்ளது.

எனவே இந்த கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்வோர் ஒரு உறுதி மொழி கடிதம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  அதில், “நான் இந்த தடுப்பூசி இன்னும் சோதனைக் கட்டத்தில் உள்ளதை அறிவேன்.  அரசின் இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் எனது அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்படும் என்பதையும் நான் நம்புகிறேன்” என உறுதி அளிக்கக் கோரப்பட்டுள்ளது.

இந்த ஊசி போட்டுக் கொள்வோருக்கு ஒரு படிவம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.  அதில் இந்த ஊசியால் ஏற்படும் தவறான விளைவுகள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  அதில் ஜுரம் மற்றும் உடல் வலி போன்ற எவ்வித விளைவுகளும் 7 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தவறான விளைவுகள் ஏற்பட்டால் பாரத் பயோடெக் நிறுவனம் இழப்பீடு அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது.,