சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய 10 நாள் பெருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேறுவதால், சென்னையில் இன்று முதல் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெசண்ட் நகரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இன்று (ஆக.29) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவான 10 நாட்கள் நடைபெறும். மாதா பிறந்தநாளான செப்.8-ம் தேதி உடன் விழா நிறைவடைகிறது.
திருவிழாவையொட்டி தேவாலயத்தில் நாள்தோறும் சிறப்பு பிராத்தனைகள், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதனால், குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசண்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பெசன்ட் நகர் ஆண்டு விழா 2024 வருகின்ற இன்று (ஆக.29) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08ம் தேதி அன்று நிறைவடைகிறது. இன்று மாலை 04.30 மணிக்கு கொடியேற்றம் மற்றும் நற்கருணை தேர் ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6வது அவென்யூ பீச் ரோடு, 3வது மெயின் ரோடு, 2வது அவென்யூ, 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும்.
இந்த நிகழ்ச்சிகளின்போது, ஒரு லட்சம் யாத்ரீகர்கள் / மக்கள் தேவாலயத்திற்கு அல்லது நற்கருணை தேர் ஊர்வலத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற நற்கருணை ஊர்வலம் செப்டம்பர் 1ம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கும், 07ம் தேதி அன்று மாலை 05.30 மணிக்கும் நடைபெறும். அங்கு பெரிய தேர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு 6வது அவென்யூ பீச் ரோடு, 4வது மெயின் ரோடு, 2வது அவென்யூ, 3வது அவென்யூ, 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும்.
போக்குவரத்து மாற்றம்
திரு.வி.க பாலத்தில் இருந்து பெசன்ட் அவென்யூ சாலை (தியோசாபிகல் சொசைட்டி சாலை) வழியாக பெசன்ட் நகர் அல்லது சாஸ்திரி நகர் செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்லும். அதிக கூட்டம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டுமே அந்த வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலைக்குள் நுழைய அனுமதிக்கப்படாது. அதற்குப் பதிலாக டாக்டர் முத்துலட்சுமி பூங்காவில் (எம்எல் பார்க்) எல்பி சாலையை நோக்கி எம்ஜி சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு, சாஸ்திரி நகர் பஸ் டிப்போ, வலதுபுறம், 2வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
வடசென்னையிலிருந்து வரும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் இடங்கள்
* ஆல்காட் நினைவு மேல்நிலைப்பள்ளி.
* அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி.
* பெசன்ட் நகர் 1வது குறுக்குத் தெரு
* பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை
* பெசன்ட் நகர் 4வது அவென்யு
* பெசன்ட் நகர் 17வது குறுக்குத் தெரு
2. ECR/OMRஇலிருந்து திருவான்மியூர் சந்திப்பு வழியாக அடையார் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் செல்லும். எல்பி ரோடு பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் மட்டும், வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பு, ஓஎம்ஆர் வழியாக கோட்டூர்புரம் அல்லது அடையாறு நோக்கி திருப்பி விடப்படும்.
தென்சென்னை ECR/OMR-லிருந்து வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் கலாஷேத்ரா அறக்கட்டளை.
3. பெசன்ட் நகர் மற்றும் சாஸ்திரி நகர் வாசிகள் இன்று மதியம் எதிர்பார்க்கப்படும் கூட்டத்தின் காரணமாக, எலியட்ஸ் கடற்கரைப் பயணத்தைத் தவிர்க்கவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தங்கள் தனிப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.