பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பால்ட்வின் குழுமம் சார்பில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான புத்தக விற்பனை தொடங்கியது. புத்தகங்களின் விலை அனைத்தும் அதிகளவில் இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் குவிந்தன. புத்தக விற்பனையை நிறுத்துமாறு பள்ளி நிர்வாகத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் புத்தக விற்பனையை உடனடியாக நிறுத்தியுள்ளது.
புத்தக விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதை மாநில கல்வி துறை அதிகாரிகள் உறுதி செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணைய தலைவர் கிரிபா ஆல்வா அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்த புகார்களின் அடிப்படையில் மக்கள் அறிவுரை துணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த கல்வி துறை உத்தரவிட்டது. மாவட்ட கல்வி ஒழுங்கு ஆணையம் இந்த விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணைக்கு கடந்த 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. பள்ளி நிர்வாகம் சார்பில் பிரதிநிதிகளோ?, வக்கீலோ அனுப்பி வைக்கவில்லை.
இதனால் ஜூன் 2ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த விசாரணையின் போது புத்தகங்கள் என்ன விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் கலந்து முடிவு செய்ய ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.